ஜல்லிக்கட்டு அவசர சட்டம், அரசியல் சட்டப்படி செல்லாது’’ முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சொரப்ஜி கருத்து

0
105
புதுடெல்லி,
ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அவசர சட்டம் இயற்றுவது, அரசியல் சட்டப்படி செல்லாது என்று முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சொரப்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
அவசர சட்டம்
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி உள்ளிட்ட சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், இந்த அவசர சட்டம், அரசியல் சட்டப்படி செல்லாது என்று முன்னாள் அட்டார்னி ஜெனரலும், பிரபல சட்ட நிபுணருமான சோலி சொரப்ஜி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:–
அவசியம் இல்லை
ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழக அரசை மத்திய அரசு அழைத்து பேசுகிறது. அது மிகவும் நல்லதுதான். ஆனால், இந்த சூழ்நிலையில், ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வருவது தேவையற்றது. அதற்கான அவசியமும் இல்லை.பொதுவாக, உடனடி நடவடிக்கை தேவைப்படுகிற நெருக்குதல்கள் நிலவும் சூழ்நிலையில்தான் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும். எனவே, தற்போதைய சூழ்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றுவது அரசியல் சட்டப்படி செல்லும் என்று நான் கருதவில்லை. இருப்பினும், எந்த வி‌ஷயமாக இருந்தாலும், என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்பது நல்லது.
போராட்டம் கூடாது
இந்த பிரச்சினைக்காக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தை கைவிடுமாறு தலைவர்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.ஏனென்றால், சட்டத்தின் அடிப்படை தத்துவத்தை உணர்ச்சிகள் மிஞ்சப் பார்ப்பதை அனுமதிக்க முடியாது. அப்படியானால், உணர்ச்சிவயப்பட்ட மக்களின் கருணையில்தான் நாம் இருக்க வேண்டி இருக்கும்.இவ்வாறு சோலி சொரப்ஜி கூறினார்.

LEAVE A REPLY