ஜல்லிக்கட்டு நடத்த தயார்நிலையில் அலங்காநல்லூர் வாடிவாசல்

0
139

அலங்காநல்லூர்:

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அலங்காநல்லூரில் வாடிவாசல் உள்பட அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாடிவாசலை கலெக்டர் வீரராகவராவ் நேற்று ஆய்வு செய்தார்.

மதுரை அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும். சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டு தடை நீக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நடக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.

எனவே இந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு கடந்த 16-ந் தேதி முதல் தொடர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கு வெடித்த போராட்டம் தமிழகம் முழுவதும் காட்டுத்தீபோல் பரவி நடந்துவருகிறது. நேற்றுடன் இந்த போராட்டம் 5 நாட்களை கடந்தது. இருப்பினும் எந்த வித சோர்வும் இல்லாமல் உற்சாகத்தோடு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்- அமைச்சர் பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினார். கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் மத்திய அரசு இப்போது ஒன்றும் செய்ய இயலாது என்று பிரதமர் மறுத்துவிட்டார். அதே சமயம் தமிழக அரசு இதுதொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்போம் என்றார்.

இதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் தமிழக அரசு சார்பில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்தார். இதனால் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட் கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் அறிவிப்பைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் நடக்கும் போராட்டம் கைவிடப்படும் என்று போலீசார் எதிர்பார்த்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘வாடிவாசலில் காளையை திறந்துவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும்’ என்று அறிவித்து விட்டனர்.

ஒரு பக்கம் போராட்டம் நடந்தாலும், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஏதுவாக வாடிவாசல் உள்பட அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேற்று அலங்காநல்லூர் வந்து, காளைகளை அவிழ்த்துவிடும் வாடிவாசல் பகுதி முழுவதும் ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறும்போது, “ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன” என்றார்.

இதனால் ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும், இதற்காக நடைபெற்று வரும் போராட்டம் ஒரு முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

LEAVE A REPLY